பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 0
பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் ஆனாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ​தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அறிவித்தபடி, 5 ஏக்கருக்குக் கீழ் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு விவசாயத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, மேட்டூர் அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி, உடனடியாக விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வி. ரவிச்சந்திரன், சி. அழகர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் வி. சிதம்பரம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். செல்வராஜ், மாவட்டச் செயலாளர் ஆர். பழனிச்சாமி, சி.ஐ.டி.யு. கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பி. தியாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என். கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் எம். கண்ணன், விவசாய சங்க வட்டப் பொருளாளர் பி. பெரியசாமி, சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் ஆர். சுரேஷ் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக, விவசாய சங்க நிர்வாகி கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து, ஆனாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளரிடம் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0