யாசகம் – பசியின் மொழியா!
ஒரு குடும்பத்தின் மையமாக இருந்தவர், இறுதியில் யாருமற்ற உடலாக மாறுவது சமூகத்தின் மிகப் பெரிய தோல்வியாகும்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் வீடற்ற யாசகர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் அன்றாடம் வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி உறவினர் இன்றி உரிமை கோரப்படாத சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வருகிறார். அனுதினமும் அன்னதானம் வழங்கி வருகையில் யாசகம் பசியின் மொழியாகிறது என்பதை உணர்கிறார். இதில் தொழில்முறை யாசகர்களை தவிர்க்க வேண்டும். இது குறித்து யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் பேசுகையில், ஒரு முதியவர் கையேந்தி நிற்கும்போது அவர் கேட்பது பணம் மட்டுமல்ல.அவர் இழந்த மரியாதையையும், அன்பையும், ஒரு மனிதராக வாழும் உரிமையையும் தேடுகிறார்.பேருந்து நிலையங்கள், கோயில் வாசல்கள், மருத்துவமனை வளாகங்கள் போன்ற இடங்களில் அமர்ந்திருக்கும் முதியவர்களின் கண்களில் தெரியும் சோகம், வயதின் சோர்வு மட்டுமல்ல,என் பிள்ளைகள் எங்கே? உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் எங்கே என்ற பதிலில்லா கேள்வியின் வலியாகும்.அவர்கள் கைகளில் இருக்கும் பாத்திரத்தைவிட, அவர்களின் மனதில் இருக்கும் தனிமையே மிகவும் கனமான சுமையாகும். மனச்சோர்வு,தன்னம்பிக்கை இழப்பு,சமூகத்திலிருந்து விலகல், வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்த உணர்வு,உடல்நலக் குறைபாடுகள் மோசமடைவதுபோன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தனிமை என்பது பல நேரங்களில் பசியைவிடக் கொடுமையான வேதனையாக மாறுகிறது. அடையாளமின்றி முடியும் வாழ்க்கைகள் தெருக்களில் யாசகம் செய்து வாழும் சில முதியவர்கள், இறுதியில் பெயரும் முகவரியும் தெரியாதவர்களாக உயிரிழக்கின்றனர். அவர்களை அடையாளம் காண யாரும் வராத சூழல்கள் உருவாகின்றன. ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தின் மையமாக இருந்தவர், இறுதியில் யாருமற்ற உடலாக மாறுவது சமூகத்தின் மிகப் பெரிய தோல்வியாகும். இத்தகைய நிலைகள் மனிதநேயத்தின் தரத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
சமூகத்தின் பொறுப்பு முதியோர்களைப் பாதுகாப்பது குடும்பத்தின் பொறுப்பு மட்டும் அல்ல; அது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் ஆகும்.குடும்பங்களில் பெற்றோரை மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும். பள்ளிகளில் மனிதநேயம் மற்றும் தலைமுறை பொறுப்பு பற்றிய கல்வி வழங்கப்பட வேண்டும். தனிமையில் வாழும் முதியவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும். அயலவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் முதியவர்களின் நலனில் அக்கறை காட்டும் கலாச்சாரம் உருவாக வேண்டும்.ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சி அதன் உயரமான கட்டிடங்களில் இல்லை; அதன் முதியவர்கள் எவ்வளவு மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்கிறார்கள் என்பதில்தான் உள்ளது.பிள்ளைகளின் பாராமுகத்தால் யாசகர்களாகும் முதியோர்கள் என்ற பிரச்சினை, பொருளாதார வறுமையைவிட உறவுகளின் வறுமையை வெளிப்படுத்துகிறது. அன்பு குறைந்த இடத்தில் பணம் இருந்தாலும் அமைதி இல்லை; பாசம் நிறைந்த இடத்தில் எளிமையான வாழ்க்கையும் உயர்ந்த மனிதநேயமாக மாறுகிறது. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர், ஒரு பெற்றோரின் கடைசி நம்பிக்கை பிள்ளைகள். அந்த நம்பிக்கை உடையும் போது உடைவது ஒரு மனம் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் பண்பாடும், ஒரு சமூகத்தின் மனிதநேயமும் ஆகும். எனவே, முதியவர்களின் கைகளை யாசகத்திற்காக நீட்டவிடாமல், அன்பிற்காகப் பிடிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதே நமது ஒட்டுமொத்த சமூகத்தின் இலக்காக இருக்க வேண்டும். பெற்றோரைப் பாதுகாப்பது ஒரு சட்டப்பொறுப்பு மட்டுமல்ல, அது நம் பண்பாட்டின் உயிர்நாடியும் மனிதநேயத்தின் உன்னத அடையாளமும் ஆகும் என்றார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0