பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி திருவெறும்பூரில் விவசாயிகள் பேரணி வட்டாட்சியரிடம் மனு
திருச்சி திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுவதையும் நிபந்தனையின்றி தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு விவசாயத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு உயர்த்திய உர விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உய்யக்கொண்டான் மற்றும் கட்டளை வாய்க்கால்களை உடனடியாகத் தூர்வாரி, பாசனத்திற்குத் தயார் செய்ய வேண்டும். திருவெறும்பூர் வட்டாரத்தில் கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விடுபட்ட பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகத் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநகர் மாவட்ட தலைவர் கே.சி. பாண்டியன், திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வேலுச்சாமி கூத்தைப்பார் முத்துக்குமார், வேங்கூர் கார்த்திகேயன், துவாக்குடி தங்கராஜ் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரவிக்குமார், குருநாதன், கணேசன், தெய்வநீதி, முருகேசன், தமிழ்ச்செல்வன், ஜோதி ராமலிங்கம், ஜெயராமன், தேவராயனேரி சக்திவேல், திரு நெடுங்குளம் கருணாநிதி, வாழவந்தான் கோட்டை சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் செல்வராஜ், சி.பி.ஐ சின்னத்துரை அரசங்குடி தங்கவேல், கூத்தைப்பார் பிச்சமுத்து, வேங்கூர் திருமாவளவன், சோழமணி, கிளியூர் பெரியசாமி, செல்வகுமார் உள்பட திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, தமிழக முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கை மனுவை திருவெறும்பூர் வட்டாட்சியரிடம் கொடுத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0