காவேரி குடிநீர் வழங்கக் கோரி சி.பி.எம். தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கரிகாலி கிராமத்தில் சீரான காவேரி குடிநீர் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை கரிகாலி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி
மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், பாலகுமார், மூத்த தோழர் சுப்ரமணியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் . இதனைத் தொடர்ந்து கரிகாலி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முசிறி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தா.பேட்டை காவல் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கரிகாலி கிராம நிர்வாக அலுவலர், சி.பி.எம். நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் : கரிகாலியில் உள்ள 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் மேலேற்றி, தினமும் காவேரி குடிநீர் விநியோகிக்கப்படும். பயன்பாட்டிற்கு வராமல் உள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3-வது உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டியை 10 நாட்களுக்குள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்படும் நீரின் அளவைக் கண்காணிக்க 15 நாட்களுக்குள் 'வாட்டர் மீட்டர்' பொருத்தப்படும் என குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் உறுதி அளித்தார். கரிகாலியில் உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஆழ்துளைக் கிணற்று நீர் சீராக வழங்க ஏற்பாடு செய்யப்படும். காவேரி குடிநீர் விநியோகிக்கப்படும் அனைத்து வீடுகளின் குடிநீர் இணைப்புகளிலும் மேல் பம்ப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உத்தண்டம்பட்டியில் உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் காவேரி குடிநீர் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும். உள்ளூர் ஆழ்துளைக் கிணற்று நீரினை நேரடியாகக் குடிநீர் பம்புகள் மூலம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0