மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததை ரத்து செய்யக் கோரி திருச்சியில் விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை வழங்கிய ஒப்புதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக மக்களின் குடிநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 19.6.2026 அன்று தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்ட மேகதாது தீர்ப்பாய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழக விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் அனைத்தையும் சிறு, குறு, பெரு என பாகுபாடு காட்டாமல் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும். போதை, ஊழல் மற்றும் லஞ்சமற்ற நேர்மையான அரசை நடத்தி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். NH-67 சுற்றுச்சாலைக்காக 10 ஏரிகளில் போடப்பட்ட சட்டவிரோத சாலைகளை அகற்ற வேண்டும். உயர்மட்ட பாலம் அமைத்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளின் பரம்பரை பாசனத்தைப் பாதுகாக்க வேண்டும். கடந்த 1977, 1999, 2005 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளைத் தாக்கி அழித்த அரியாறு, கோரையாறு, உய்யகொண்டான் கட்டளை கால்வாய், குடமுருட்டி, கொடிக்கால் ஆறுகளின் பெருவெள்ளப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி அவற்றைச் செயல்படுத்த வேண்டும். பழைய ஆவணங்களைக் கொண்டு ஆறுகளின் கரைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை விவசாயிகளுக்கென்று தனித்தொகுதி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் திருச்சி என் ஹெச் 67 சுற்றுச்சாலைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏரிகள் மீட்பு கூட்டுக்குழு சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் திருச்சி செழியன், காவிரி உரிமை மீட்புக்குழு மு.த.கவித்துவன், வழக்கறிஞர்கள் கென்னடி, கமுருதீன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், ஜான்மெல்கியோர் ராஜ், விவேகானந்தன், மண்ணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவாக, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ந.கணேசன் நன்றி உரையாற்றினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0