ஆண்டாள் கோவிலில் நாளை தேரோட்டம் ஸ்ரீரங்கம் கோவில் மங்களப்பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நாளை நடக்கவுள்ளதை முன்னிட்டு ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் மங்கல சீர்வரிசைப் பொருட்கள் நேற்று மாலை ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியினால் அவருக்கு பூமாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப்பெயரும் ஏற்பட்டது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்துவந்தது. பல்வேறு காரணங்களினால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. எனினும் இரு ஊர் பக்தர்களின் முயற்சிகளினால் தற்போது அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரைத் தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் பரஸ்பரம் மங்கலப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இவ்வகையில் நாளை (14-ந்தேதி) ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடக்கவுள்ளதை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதற்கென நேற்று மாலை ரெங்கநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு செல்லவுள்ள மங்களப்பொருட்கள் கோவில் ரங்கவிலாசமண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின், உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. இந்த மங்களப்பொருட்கள் இன்று காலை ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு மதியம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர்,அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாார்கள் மூலம்
சமர்ப்பிக்கப்படும் .
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0