ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்பகிர்மானம், அனல் மற்றும் புனல் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை, பொதுக்கட்டுமான வட்டம் மற்றும் மின் தொடரமைப்பு கழகங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். 5.1.1998-க்கு பிறகு இன்று வரை மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்ததொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை 950/8.8.90-ன் படி தடை செய்யப்பட்ட 18 இடங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, சீருடை, பி.எப், இ.எஸ்.ஐ. இன்சூரன்ஸ் பிடித்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வருகை பதிவேடு முறைப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்டப் பொருளாளர் இருதயராஜ், வட்ட துணைத் தலைவர்கள் எஸ்.கே. செல்வராசு, கண்ணன் மற்றும் கோட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிறைவாக கிழக்கு கோட்டத் தலைவர் முகமது அப்துல் காதர் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0